
ஸ்டாக்ஹோம்: நவ. 26-
ஸ்வீடன் தத்துவஞானியும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான நிக் போஸ்ட்ரோம், எதிர்காலத்தில் மனிதர்கள் 1,400 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் வெளியிட்ட ‘சூப்பர் இன்டெலிஜென்ஸிற்கான உகந்த நேரம்’ என்ற ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, “நாம் வயதாவாமல் இருந்திருந்தால், நமது ஆயுட்காலம் சுமார் 1,200 அல்லது ஒருவேளை 1,400 ஆண்டுகளாக இருந்திருக்கலாம்” என்று அவர் கூறினார். இது மனிதர்களுக்கு அழிவே இல்லாத சாகாவரத்தைப் பற்றிய கணிப்பு அல்ல என்றும், கணித ரீதியான சாத்தியக்கூறு மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
போஸ்ட்ரோம் குறிப்பிடும் 1,400 ஆண்டுகள், இதுவரை சரிபார்க்கப்பட்ட மிக அதிக வயதுடைய மனிதரின் வயதைவிட 11 மடங்குக்கும் அதிகமாகும். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக அதிக வயது வரை வாழ்ந்த, சரிபார்க்கப்பட்ட மனிதரான பிரெஞ்சுப் பெண் ஜீன் கால்மென்ட், 122 ஆண்டுகள் 164 நாட்கள் வாழ்ந்து 1997-ல் உயிரிழந்தார். முதுமை எனும் உயிரியல் செயல்முறையை விஞ்ஞானிகளால் முழுமையாக நீக்க முடிந்தால், வயது அதிகரிக்கும்போது தீவிரமாக உயரக்கூடிய மரண அபாயத்தை மக்கள் இனி எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்பதே போஸ்ட்ரோமின் கணித ரீதியான அடிப்படை கருத்தாகும். மனித உடலில் ஏற்படும் செல்களின் சிதைவைச் சரிசெய்து, முதுமையை முற்றிலும் தடுக்கும் மருத்துவ சிகிச்சைகளை எதிர்கால ஏஐ தொழில்நுட்பம் கண்டறியும் என்று அவர் நம்புகிறார். ஆரோக்கியமான 20 வயது இளைஞருக்கு, முதுமை அல்லாத காரணங்களால் ஏற்படும் ஆண்டு இறப்பு விகிதம் சுமார் 0.07 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருந்தால், சராசரி ஆயுட்காலம் சுமார் 1,429 ஆண்டுகளாக இருக்கும் என அவர் கணித்துள்ளார். எனினும், மனித முதுமையைத் தடுக்கும் நிறுவப்பட்ட சிகிச்சை எதுவும் தற்போது இல்லை. போஸ்ட்ரோம் கற்பனை செய்யும் உயிர்மருத்துவ மாற்றத்தை தற்போதைய ஏஐ அமைப்புகள் வழங்க முடியும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.













