Home மாவட்டங்கள் சென்னை பள்ளிதோறும் ‘வாசகர் வட்டம்’ தொடங்க பபாசி கோரிக்கை

பள்ளிதோறும் ‘வாசகர் வட்டம்’ தொடங்க பபாசி கோரிக்கை

சென்னை, நவ. 28-
இந்தியாவில் தற்போது ரூ.1.08 லட்சம் கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. இதில் அச்சுப் புத்தகங்கள் ரூ.95,816 கோடிக்கும், டிஜிட்டல் பதிப்புகள் ரூ.7,048 கோடிக்கும், ஆய்வுசார் இதழ்கள் ரூ.5,150 கோடிக்கும் விற்பனையாகின்றன. இந்த விற்பனை 2031-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குறைந்த விலை, அதிக தள்ளுபடி மற்றும் வாசகர்களின் மாறிவரும் பழக்கவழக்கங்கள் காரணமாக இந்திய பதிப்புத் துறை கடும் நெருக்கடியையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, பள்ளிகளில் முன்பு இருந்ததுபோல் தினமும் ஒரு பாடவேளையைப் பொது நூல்கள் வாசிப்பதற்காக ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ‘வாசகர் வட்டம்’ தொடங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம். 12,500 ஊராட்சிகளில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள், போதிய நூலகர்கள் இல்லாததால் முடங்கியுள்ளன. அவற்றைச் சீரமைத்து முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். அரசு புத்தகக் கொள்முதலில், கணினியில் வெறும் 25 பக்கங்களை மட்டும் பார்த்துத் தேர்வு செய்யும் முறையை மாற்றி, முன்புபோல் ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு புத்தகத்தை முழுமையாகப் படித்துத் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும்.