
சென்னை: நவ. 28-
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த மசோதா தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவுள்ள நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட கருத்தில், “இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்கிறார்கள். அவர்களை 21-ம் நூற்றாண்டின் எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்” என்று கூறியிருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகமும், தமிழகம் மற்றும் தென்மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியதும், அகில இந்தியத் தலைவர்களை சென்னையில் ஒன்றிணைத்து கூட்டம் நடத்தியதும் திமுகதான்.
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும், எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீதப் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரம் அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மாற்றப்படக் கூடாது. இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கும். சமரசத்துக்கு இடமில்லை.
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், “முதுகுக்குத்திகளின் முணுமுணுப்புகளும்” திமுகவின் நிலைப்பாட்டை அசைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நலனை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.













