Home மாவட்டங்கள் சென்னை 5 மாதங்களில் 4,400 பள்ளி விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

5 மாதங்களில் 4,400 பள்ளி விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

சென்னை, நவ. 28-
தமிழகத்தில் இணையவழி விண்ணப்ப நடைமுறை அமல்படுத்தப்பட்ட ஐந்து மாதங்களில், தனியார் பள்ளிகளின் 4,400 விண்ணப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய பள்ளிகள் தொடங்குதல், தடையில்லாச் சான்று (என்.ஓ.சி.) பெறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்களை ஜூலை 1-ம் தேதி முதல் இணையவழியில் சமர்ப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அனுமதி வழங்கும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கத்திலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இந்தப் புதிய நடைமுறைக்கு தனியார் பள்ளிகள் மத்தியில் பரவலான வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டான 2026-27-ல் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, பள்ளி அங்கீகாரம் புதுப்பிப்பதற்காக 4,180 விண்ணப்பங்களுக்கும், புதிய பள்ளிகளைத் தொடங்குவதற்காக 105 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்காக 96 விண்ணப்பங்களுக்கும், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக 19 விண்ணப்பங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 4,400 விண்ணப்பங்களுக்கு ஐந்து மாதங்களில் பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வகை வாரியாக, அதிகபட்சமாக மெட்ரிக் பள்ளிகளின் 2,229 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் 1,504 விண்ணப்பங்களுக்கும், சிபிஎஸ்இ பள்ளிகளின் 420 விண்ணப்பங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 105 புதிய பள்ளிகளைத் தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 50 சதவீதம் சிபிஎஸ்இ பள்ளிகள் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.