
சென்னை, நவ. 28-
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரு மாதங்களாக டயர்கள் வாங்கப்படாததால், 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பழுதான டயர்களுடன் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. மக்கள் பயன்பாட்டுக்கான பேருந்துகளை இயக்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் என மொத்தம் 8 கழகங்கள் உள்ளன. இவை 26 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 317 பணிமனைகளில் இருந்து 21,198 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே நிலவி வந்த நிதி நெருக்கடியால் பேருந்துகளுக்கான உதிரிபாகங்கள் வாங்கப்படாத நிலையில்,
தற்போது டயர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிமனையிலும் 5 முதல் 10 பேருந்துகள் வரை நிறுத்தப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்களும், குறிப்பாக கிராமப்புற மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களுக்கு இயக்கப்படும் 2 அல்லது 3 பேருந்துகளில் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதால், அவசரத் தேவைகளுக்காகக்கூட மக்கள் நகரங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின் நோக்கமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.













