Home மாவட்டங்கள் சென்னை கோவையில் நாரைகளுக்கு பறவைக் காய்ச்சல்

கோவையில் நாரைகளுக்கு பறவைக் காய்ச்சல்

கோவை: நவ. 28-
கோவை மாநகரில் அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சித்தாபுதூர் அருகே கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்த 14 குளத்து நாரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அந்த மாதிரிகளின் முடிவுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாரைகளின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்ததை ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது. இதையடுத்து, இந்தத் தகவல் சுகாதாரத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவை மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் மாநகரின் முக்கிய பகுதியில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு–கேரள மாநில எல்லைப் பகுதியான வாளையாறு சோதனைச் சாவடியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அந்த வாகனங்கள் தொடர்பான விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். சித்தாபுதூர் அருகே உயிரிழந்த நாரைகளின் மாதிரி முடிவுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோவை மாநகரிலும் எல்லைப் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்கின்றன.