
சென்னை: நவ. 28-
சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்தில் 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததாக 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.மும்பையிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரெயில் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கொரட்டூர் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 26-ம் தேதி காலை கொரட்டூர் ரெயில் நிலையத்தில் போலீசார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த அஜித்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொரட்டூர், பாடி, அம்பத்தூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இந்த போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.இதையடுத்து அஜித்குமாரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் குறித்தும், வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் கொரட்டூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













