Home மாவட்டங்கள் சென்னை செஸ் வீராங்கனைகளுக்கு விஜய் வாழ்த்து

செஸ் வீராங்கனைகளுக்கு விஜய் வாழ்த்து

சென்னை: நவ. 28-
FIDE உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற தமிழக வீராங்கனைகள் சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.வெனிசுலாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கும், இப்போட்டியில் 3-ம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை நிவேதிதாவுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சவிதா ஸ்ரீ, நிவேதிதா ஆகியோரின் அபாரமான அறிவாற்றல், நுணுக்கமான ஆட்டத்திறன், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் உலக அரங்கில் சாதனை படைத்துள்ளனர். அவர்களது வெற்றி, இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சவிதா ஸ்ரீ மற்றும் நிவேதிதா ஆகியோர் வருங்காலங்களிலும் பல்வேறு சர்வதேச சாதனைகளைப் படைத்து, உலக செஸ் அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என முதலமைச்சர் விஜய் வாழ்த்தியுள்ளார்.