Home செய்திகள் தேசிய செய்திகள் சோப்பு, ஷாம்பூவுக்கு பச்சை, சிவப்பு குறியீடு

சோப்பு, ஷாம்பூவுக்கு பச்சை, சிவப்பு குறியீடு

புதுடெல்லி, செப். 22-
சோப்பு, ஷாம்பூ, பற்பசை, அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களின் பொதிகளில், அவை சைவமா அல்லது அசைவமா என்பதைத் தெரிவிக்கும் குறியீடுகளை கட்டாயமாகப் பதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது அவற்றின் மூலத்தன்மையை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.இதற்காக, தொகுக்கப்பட்ட பொருட்களுக்கான சட்ட அளவியல் விதிகள், 2011-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்தத் திருத்தம் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.திருத்தப்பட்ட விதிகளின்படி, சைவ மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் பொதிகளில் பச்சை நிறப் புள்ளி இடம்பெற வேண்டும். அசைவ மூலப்பொருட்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி இடம்பெற வேண்டும். இந்தக் குறியீடு பொதியின் பிரதான காட்சிப் பலகையின் மேற்பகுதியில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். இதன் மூலம், பொருளின் தன்மையை நுகர்வோர் கடைகளிலேயே எளிதாக அடையாளம் காண முடியும். இந்த அறிவிப்பு சோப்பு, ஷாம்பூ, பற்பசை, பிற அழகு சாதனங்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களுக்கு பொருந்தும். இனி இவ்வகைப் பொருட்களின் பொதிகளைப் பார்க்கும்போது, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்களின் தன்மையை குறியீட்டின் மூலம் நுகர்வோர் அறிந்து கொள்ளலாம்.