
வாஷிங்டன்: செப்.15-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 24 வயது இளைஞரும், இளம் பெண்ணும் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.நியூயார்க் நகர சப்வே ரயில் தண்டவாளத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண், பெண் இருவர் அமர்ந்திருந்தனர். அந்த வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலவிகா சித்ரே மற்றும் நவம் கவுல் என அடையாளம் காணப்பட்டனர்.ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றபோதும், விபத்தைத் தவிர்க்க முடியவில்லை என்று நியூயார்க் போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் எதற்காக ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியில், சம்பவம் நிகழ்வதற்கு சற்று முன்பு மலவிகா சித்ரேவும் நவம் கவுலும் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. இருவரும் அதிக போதையில் இருந்ததாகவும், தங்களை நோக்கி நெருங்கி வந்த ரயில் உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணராமல் இருந்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.














