போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மதுரை: ஜனவரி . 1 – மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறை உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச்சில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.தேர்தல் விதிமுறை: முதல் கட்டமாக தேர்தல் விதிமுறையின்படி காவல், வருவாய் போன்ற துறைகளின் உயர் அதிகாரிகள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்தாலோ, சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தாலோ, அவர்களை வேறு இடத்துக்கு மாற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதையடுத்து, தமிழக காவல் துறையில் உயர் அதிகாரிகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. விதிகளின்படி பலர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது: அரசியல் சார்பு கொண்டவர் களின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் காவல் துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளை ஜன. 31-ம் தேதிக்குள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தேர்தலுடன் நேரடி தொடர்புடைய எந்த அதிகாரியும் தனது சொந்த மாவட்டம், சொந்த தொகுதியில் பணிபுரியக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.