Home மாவட்டங்கள் சென்னை மதுராந்தகம், தாராபுரம்எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

மதுராந்தகம், தாராபுரம்எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

சென்னை, அக். 12-
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் முன்னிலையில் இருவரும் பதவியேற்றனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், சத்தியபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். பின்னர் இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தவெக சந்தித்த முதல் இடைத்தேர்தலிலேயே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ. இடங்கள் உள்ளன. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா காரணமாக மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய 7 தொகுதிகள் காலியாக இருந்தன. இதனால் சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 227 ஆக இருந்தது. இதில் சபாநாயகர் உள்பட ஆளும் கட்சியான தவெகவுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.