Home செய்திகள் தேசிய செய்திகள் ராஜஸ்தானில் 7-வது முறையாக போட்டியின்றி தேர்வான 86 வயது மூதாட்டி

ராஜஸ்தானில் 7-வது முறையாக போட்டியின்றி தேர்வான 86 வயது மூதாட்டி

புதுடெல்லி, அக். 25- ராஜஸ்தானில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பார்​மர் மாவட்டம் வீரேந்திர நகர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 86 வயதான பிகி தேவி தொடர்ந்து 7-வது முறையாக போட்டியின்றித் தேர்வாகியுள்ளார். இதன் மூலம், அந்தக் கிராமத்தில் கடந்த 42 ஆண்டுகளாக பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறாத நிலை தொடர்கிறது. ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய போட்டி நிலவும் சூழலில், வீரேந்திர நகர் கிராமப் பஞ்சாயத்துக்கு மட்டும் பிகி தேவி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மாநில அமைச்சரான ஹேமராம் சவுத்ரியின் மனைவி ஆவார்.கிராம மக்கள் அனைவரும் மீண்டும் ஒருமனதாக ஒன்றிணைந்து, கிராமத்தின் பொறுப்பை பிகி தேவியிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் தொடர்ந்து 7-வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், வீரேந்திர நகர் கிராமத்தில் கடந்த 42 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரமும் நடைபெறவில்லை. பிகி தேவியின் இந்தத் தேர்வு வட மாநிலங்களில் பேசுபொருளாகியுள்ளது. பிகி தேவி முதன்முதலில் 1984-ம் ஆண்டு வீரேந்திர நகர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு நான்கு தசாப்தங்களாக அவருக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த முறையும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி பிகி தேவியை அதிகாரப்பூர்வமாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவித்தார்.