
டெஹ்ரான், செப். 16- ஈரானில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தின் டயர் திடீரெனக் கழன்றதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் குலுங்கியதுடன், அதன் மேற்கூரையின் சில பகுதிகள் பெயர்ந்து விழுந்தன. பயணிகள் அலறிய பதற்றமான விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் வடகிழக்குப் பகுதியில் மஷ்ஹத் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 373 ரக விமானம் கெர்மான்ஷா நகருக்குப் புறப்பட்டது. விமானத்தில் பணியாளர்களும் பயணிகளும் இருந்தனர்.மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக விமானி, பயணிகளிடம் தெரிவித்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் நிலைமை மேலும் மோசமடைந்தது. விமானத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டதுடன், அது கடுமையாகக் குலுங்கியது. விமானத்தில் வைக்கப்பட்டிருந்த லக்கேஜ்கள் கீழே விழுந்தன. விமானத்தின் மேற்கூரை சேதமடைந்து சில பகுதிகள் கீழே விழுந்தன. இதனால் பயணிகள் பதற்றமடைந்து அலறினர். மரண பயத்தில், தங்களைக் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டினர். தொடர்ந்து விமானத்தை இயக்கினால் பிரச்சினை ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, அதைத் தரையிறக்க முடிவு செய்தார். விமானம் புறப்பட்ட மஷ்ஹத் விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
















