
வாஷிங்டன்: செப்.5-
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் முக்கிய அணுசக்தி தளமான பிகாக்ஸ் மவுண்டைன் மீது மிக விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.
ஈரானின் அணு ஆயுதங்களை தடுப்பது அமெரிக்காவின் பிரதான நோக்கம் என்றும், பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா ஈரானின் ராணுவ இலக்குகளை தாக்கி வருவதாகவும் டிரம்ப் கூறினார். மேலும், ஈரானில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால், பிகாக்ஸ் மவுண்டைன் தளம் உடனடியாக தாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவின் இந்த தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள் ஈரானின் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. பிகாக்ஸ் மவுண்டைன் என்பது நதாண்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியாகும். இது மலைகளுக்கு அடியில் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், மேற்கத்திய உளவு அமைப்புகள் இதனை ஈரானின் ரகசிய அணுசக்தி செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கருதுகின்றன. எனினும், இது அமைதியான அணுசக்தி தேவைகளுக்காக மட்டுமே என ஈரான் கூறுகிறது.டிரம்பின் எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.













