Home மாவட்டங்கள் பெங்களூர் கார்கே விவகாரம்: பிஜேபி தலைவர்கள் மீது பெங்களூரில் வழக்கு பதிவு

கார்கே விவகாரம்: பிஜேபி தலைவர்கள் மீது பெங்களூரில் வழக்கு பதிவு

பெங்களூர்: செப்.5-
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை ‘தூய்மை’ செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பெங்களூருவில் பாஜக தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசில் புகார்
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ந் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பேசியதால் மைதானம் ‘அசுத்தமாகிவிட்டது’ என்று கூறி, ஆகஸ்ட் 10-ந் தேதி உள்ளூர் பாஜக தலைவர்கள் அங்கு தூய்மைப்படுத்தும் பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் எஸ்.டி. பிரிவு முன்னாள் துணைத் தலைவர் டி.ஆர்.ராமப்பா ஆகஸ்ட் 31-ந் தேதி பெங்களூரு விதான சௌதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜீரோ எப்.ஐ.ஆர். பதிவு
சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, செப்டம்பர் 4-ந் தேதி பெங்களூரு போலீசார் ஜீரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரகாண்ட் நைனிடால் பகுதி பாஜக தலைவர்கள் மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு தழுவிய போராட்டம்
இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக, இச்சம்பவம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, அவமதிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தூய்மைப்படுத்தும் சடங்கில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.