
வாஷிங்டன், ஜூலை 21- ஈரான் மீது 10வது நாளாக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவத் திறன்களைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தொடர்ந்து பத்தாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியது. குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடுத்த நிலையில் இந்தத் தொடர் குண்டுவீச்சுகள் நிகழ்ந்தன. இது குறித்து அமெரிக்க படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரான் ராணுவத் திறன்களை மேலும் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ராணுவ தலைமைத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய வான்வழி தாக்குதல்களைத் தொடங்கின. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த சில நாட்களுக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் ஈரானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் ஒரு அமெரிக்க வீரரைக் கொல்லும் ஒவ்வொரு முறையும், அந்தக் கொலைக்காக அவர்கள் பல மடங்கு விலை கொடுக்க நேரிடும். இந்த உத்தரவு, அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் ராணுவத்தில் உள்ள ஒவ்வொரு தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.














