
திருப்புவனம்: ஜூலை 20-
மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 11-ம் கட்ட அகழாய்வுப் பணியையும், திறந்தவெளி அகழ் வைப்பகத்தையும் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முந்தைய ஆட்சிகளில் தொடங்கப்பட்ட அனைத்து நல்லதிட்டங்களையும் தவெக அரசு நிறுத்தாது. அதில் இருக்கும் குறைகள் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும்.
பழிவாங்கும் அரசியல் எங்களிடம் இல்லை. கீழடி மட்டுமின்றி அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. மேலும், தேவையான அறிவியல் சான்றுகளைத் தாக்கல் செய்து கீழடி அகழாய்வு முடிவுகளைவெளியிட, இந்திய தொல்லியல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கட்டண விவரங்களை வெளியிடாதது குறித்து புகார் வந்த பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலித்து விதிகளை பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கை குறைந்தாலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. வீடு, வீடாகச் சென்று அறிவுறுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சிதான் தொடர்கிறது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
மத்திய வெளியுறவுத் துறையிடம் சட்டப்பூர்வ அனுமதி பெற்றுத்தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டோம். இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கட்சியில் இணையும் அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
















