Home செய்திகள் தேசிய செய்திகள் ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்களுக்குஉச்ச நீதிமன்றப் பயிற்சி

ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்களுக்குஉச்ச நீதிமன்றப் பயிற்சி

புதுடெல்லி, அக். 4- பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சுமார் 40 முக்கிய பிரிவுகளும், சுமார் 2,500 துணைப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் வழக்கறிஞர்களுக்காக அகில பாரதிய அதிவக்த பரிஷத் (ஏபிஏபி) 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தமிழ்நாடு கிளையாக அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (ஏபிவிஎஸ்) 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏபிவிஎஸ்ஸில் தென் தமிழ்நாடு, வடக்கு தமிழ்நாடு என இரு பிரிவுகள் உள்ளன.ஏபிவிஎஸ் சார்பில் இளம் வழக்கறிஞர்களுக்கான உச்ச நீதிமன்றப் பயிற்சி முகாம், ‘சுப்ரீம் விஷன்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. இதன் இரண்டாவது பயிற்சி முகாம் கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இதில் தென் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 5 ஆண், 5 பெண் என மொத்தம் 10 இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றி வருபவர்கள். பயிற்சியின்போது உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் அறிந்து கொண்டனர். இதற்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் உதவியாளர்களாக இணைந்து பணியாற்றினர். இதுகுறித்து பயிற்சி பெற்றவர்களில் ஒருவரும், பழனி மாவட்ட கிளைச் செயலாளருமான எம். கோகுல் கூறியதாவது: “எங்கள் தொழிலின் மிகப்பெரிய கனவாக இருப்பது உச்ச நீதிமன்றத்தின் நேரடி அனுபவம். பயிற்சி நாள்களில் தமிழரான உச்ச நீதிமன்ற நீதிபதி வி. மோகனாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு வழக்கறிஞர் எவ்வாறு செயல்பட வேண்டும், நீதிபரிபாலனத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் குறித்து அவர் அறிவுரை வழங்கினார்” என்றார். பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியில் அகில பாரதிய அதிவக்த பரிஷத் தலைவரும், கேரள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியுமான எம். நகரெஷ், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் செயலாளருமான பி. பரத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற இளம் வழக்கறிஞர்களுக்கு அவர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.