
சென்னை, அக். 25- வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து வலுப்பெற்று நாளை புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.
மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, 25-ம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26-ம் தேதி (நாளை) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும். இது தொடர்ந்து வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திரக் கடலோரப் பகுதிக்கு அருகே 28-ம் தேதி காலை நகர வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் அதிகனமழை (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமுதல் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
26-ம் தேதி (நாளை) சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.














