
கிளாஸ்கோ, ஆக. 2–- 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கம், 3 வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, சாக்சி சவுத்ரி, பிரீத்தி பவார், பிரியா கங்காஸ் ஆகியோர் தங்கம் வென்றனர். இந்திய வீரர் ஜதுமணி சிங் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனையும் நடப்பு உலக சாம்பியனுமான ஜாஸ்மின் லம்போரியாவும், வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷும் மோதினர். இதில் ஜாஸ்மின் 5-0 என்ற கணக்கில் மைக்கேலா வால்ஷை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் 54 கிலோ பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கனடாவின் ஸ்கார்லெட் டெல்கடோவைத் தோற்கடித்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
















