
புதுடெல்லி ஜூன் 8-
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்கவும், ஒற்றுமையை வெளிப்படுத்தவும், உட்கட்சி பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இன்று ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) இல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று கூட்டணி தலைமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸும் தமிழக வெற்றி கழகமும் (டி.வி.கே.) இணைந்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன. இருப்பினும், தேசிய அளவிலான இந்த முக்கிய கூட்டத்திற்கு விஜய் அவர்களின் கட்சிக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை? என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. “தற்போது மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ எந்தவொரு எம்.பி.க்களையும் கொண்டிராத அரசியல் கட்சிகளுக்கு இன்றைய கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை” என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
தமிழக தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, டி.வி.கே. கட்சி தங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு காலியான மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி பதவியை, கூட்டணியை வலுப்படுத்துவதற்காக காங்கிரஸிற்கு விட்டுக்கொடுத்தது. இதன் காரணமாக, தற்போதைக்கு நாடாளுமன்றத்தில் டி.வி.கே.க்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லை.
சினிமாவில் இருந்து அரசியலில் குதித்து, சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சிக்கு, இன்று புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் மிக முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு கிடைக்கவில்லை. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், டி.வி.கே.யின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கூட்டணியின் வியூகத்தை மாற்றி அமைக்கவும், பலத்தை நிரூபிக்கவும், கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளவும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மொத்தம் 23 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரியா சுலே டெல்லி வந்துள்ளார்.
இதே நேரத்தில், தமிழகத்தின் முக்கிய மாநிலக் கட்சியான தி.மு.க. இந்த கூட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தமிழக தேர்தலில் தோல்வி அடைந்த உடனேயே, தன்னை கழற்றிவிட்டுவிட்டு விஜய்யின் டி.வி.கே. கட்சியுடன் கைகோர்த்து காங்கிரஸ் அரசு அமைத்ததை தி.மு.க. கடுமையாக கண்டித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தங்களுக்கு “துரோகம்” இழைத்துவிட்டதாகவும், “முதுகில் குத்திவிட்டது” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆக்ரோஷமாக கொந்தளித்துள்ளது. அத்துடன், ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தே ஒட்டுமொத்தமாக வெளியேறுவதாகவும், இனிவரும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
தி.மு.க. கூட்டத்தை புறக்கணித்துள்ள நிலையில், டி.வி.கே. மற்றும் பா.ஜ.க. இடையே கடும் அரசியல் வார்த்தைப்போர் வெடுத்துள்ளது. “தி.மு.க. நாடகமாடுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக சதித் திட்டம் தீட்டி வருகிறார். தி.மு.க. இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கையாக்கூலியாக மாறிவிட்டது” என்று மதுரை மத்திய தொகுதி டி.வி.கே. சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) வி.எம்.எஸ். முஸ்தபா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
டி.வி.கே.யின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பா.ஜ.க. நிர்வாகி வினோஜ் பி. செல்வம், “‘இந்தியா’ கூட்டணி முற்றிலும் தவிடுபொடியாகிவிட்டது. திரிணாமுல் காங்கிரஸில் பிளவு ஏற்படும் அறிகுறிகள் தென்படுகின்றன; தமிழகத்தில் தி.மு.க. தரைமட்டமாகிவிட்டது; காங்கிரஸ் வெறும் பிராந்திய கட்சியாக சுருங்கிவிட்டது. இதற்கிடையில் விஜய்யின் டி.வி.கே. கட்சி என்பது வெறும் ‘தி.மு.க. 2.0’ போன்றதுதான்” என்று கடுமையாக கேலி செய்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, இன்றைய ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டம் தேசிய அரசியலோடு சேர்த்து, தமிழகத்தின் கூட்டணி சமன்பாடுகளிலும் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




















