Home மாவட்டங்கள் பெங்களூர் இஸ்ரேலில் மர்மமான முறையில் மாயமான மங்களூரு வாலிபர் சாவு

இஸ்ரேலில் மர்மமான முறையில் மாயமான மங்களூரு வாலிபர் சாவு

மங்களூரு, நவ. 25-
வேலை தேடி இஸ்ரேலுக்குச் சென்று மர்மமான முறையில் மாயமான மங்களூரு அருகே படீல் கண்ணூர் கொடேக்கல் பகுதியைச் சேர்ந்த ஷட்ராக் இம்மானுவேல் (வயது 41) உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இவரது உடல் 37 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேலில் இருந்து தாயகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி குடும்பத்தினருடன் கடைசியாகப் பேசிய ஷட்ராக் இம்மானுவேல், அதன் பிறகு மாயமானார். இந்த நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, அவர் கடந்த அக்டோபர் 19-ந் தேதியே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால், அவரது சாவிற்கான சரியான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
ஷட்ராக் இம்மானுவேலின் சகோதரி சவிதா தனது சகோதரர் உயிரிழந்த செய்தியை உறுதிப்படுத்தியதோடு, அவரது உடல் மங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் கடந்த நவம்பர் 9-ந் தேதி உடலை தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கான தடையில்லா சான்றிதழை வழங்கியது. இறந்தவரின் மனைவி டெய்சி இம்மானுவேலின் கோரிக்கையை ஏற்று, மங்களூரு விமான நிலையத்தில் உடலைப் பெற்றுக்கொள்ள சகோதரி சவிதா மற்றும் சந்திரமோகன் சந்திரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
குடும்பத்தினர் அளித்துள்ள தகவலின்படி, நவம்பர் 25-ந் தேதி மதியம் 3 மணிக்கு சக்திநகர் தொழிலாளர் காலனி முதல் குறுக்குத் தெருவில் உள்ள அமேசிங் கிரேஸ் இல்லத்திற்கு ஷட்ராக் இம்மானுவேலின் உடல் கொண்டு வரப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கி, மங்களூரு கோரிகுட்டே மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ஷட்ராக் இம்மானுவேல் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி மங்களூருவில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலமாக முறையான வேலை விசாவில் இஸ்ரேலுக்குச் சென்றார். அங்கு நசரேத் அருகே உள்ள நோஃப் ஹகலிலில் செயல்படும் யு.சி.டி. ஃப்ளூயிட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2026-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி இரவு 8.05 மணியளவில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சுமார் 22 நிமிடங்கள் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அதன்பிறகு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. வேலை செய்யும் இடத்திற்கும் அவர் செல்லாததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர்.இதையடுத்து ஷட்ராக் இம்மானுவேலைக் கண்டுபிடித்துத் தருமாறு அவரது மனைவி டெய்சி இம்மானுவேல் மற்றும் சகோதரி சவிதா ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் டெல் அவிவ் இந்திய தூதரகத்தில் புகார் அளித்து கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அக்டோபர் 16-ந் தேதி குடும்பத்தினருடன் கடைசியாகப் பேசிய அவர், அக்டோபர் 19-ந் தேதியே உயிரிழந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது சாவிற்கான காரணம் தெரியாதது குடும்பத்தினரின் வேதனையை மேலும் அதிகரித்துள்ளது. 37 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு உடல் தாயகம் திரும்பியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.