
சபரிமலை: நவ. 25-
சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்காகச் சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர், உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். நவம்பர் 18 முதல் 24-ம் தேதி வரை இதய பாதிப்பு, திடீர் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். இந்நிலையில், சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 14 பேருக்கு இதுவரை சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும், சபரிமலைக்கு வந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒரே வாரத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடல்நிலையை முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மலை ஏறுவதற்குத் தேவையான மருத்துவ ஏற்பாடுகள் பம்பை பகுதியில் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியிலும் பல்வேறு இடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பக்தர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.













