Home தலைப்பு செய்தி இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி

இ.ஓ.எஸ்.5 சோதனை வெற்றி

ஸ்ரீஹரிகோட்டா: செப். 4-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிக முக்கியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ‘ஜூசாட்-1 ஏ’ (இ.ஓ.எஸ். 5) என்பதைக் கொண்டு, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட்டில் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கவுண்ட்டவுன் முன்தினம் இரவு தொடங்கியது.இன்று அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் பாய்ந்தது. 18 நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் புவி நிலை சுற்றுவட்டப்பாதையில் ‘இ.ஓ.எஸ்.-5’ வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் இதனை உற்சாகமாக கொண்டாடினர். மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமராக்கள் மூலம், இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது. இது இந்திய துணைக்கண்டத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான தரவுகளை வழங்கும்.இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.