Home மாவட்டங்கள் பெங்களூர் புதுச்சேரிக்கு வருகை தரும் நித்யானந்தா – திடீர் பரப்பரப்பு

புதுச்சேரிக்கு வருகை தரும் நித்யானந்தா – திடீர் பரப்பரப்பு

புதுச்சேரி: செப். 4-
புதுச்சேரியில் உள்ள கைலாச தியான பீடத்தின் கும்பாபிஷேக விழாவில் சுவாமி நித்யானந்தா பங்கேற்க உள்ளார். இதனால், இவ்விழாவுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கைலாசா புதுச்சேரி ஆன்மிகக் குழுவினர் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, ‘‘அடுத்த ஆண்டு ஏம்பலத்தில் உள்ள கைலாச தியான பீடத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் நித்யானந்தா பங்கேற்க உள்ளார் என்பதால், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுகிறோம்’’ எனக் கூறினர்.
இதன் பின்னர், கைலாசாவின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பணிகளை விளக்கும் ஒரு புத்தகத்தையும் முதல்வரிடம் வழங்கினர். இதன் மூலம் கைலாசாவுக்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மேம்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். மேலும், குழுவினர் புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிகத் தலைவர் அன்பழகன், அமைச்சர் ராஜவேலு உள்ளிட்ட பலரையும் சந்தித்து, விழாவில் பங்கேற்க அழைப்பு வழங்கினர்.