
புதுடெல்லி: செப். 4-
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், “பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திவ்விய செய்திகளில் பிரதிபலனற்ற கடமையாற்றும் ‘நிஷ்காம கர்மா’வின் தூண்டுதல் உள்ளது. இது மனிதகுலத்திற்கு என்றும் வழிகாட்டும் ஒளிவிளக்காகும். பக்தியையும் வழிபாட்டையும் அடிப்படையாகக் கொண்ட இந்த புனிதத் திருவிழா, அனைவரது வாழ்விலும் நேர்மறை ஆற்றலையும் சக்தியையும் நிரப்பட்டும்” என்று வாழ்த்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், “பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்க்கையும் போதனைகளும் இந்திய கலாச்சாரம் மற்றும் தத்துவத்திற்கு புதிய வீரியத்தை அளிக்கின்றன. அவர் சத்தியம், தர்மம், நீதி மற்றும் கருணையின் பாதையைக் காட்டியுள்ளார். கிருஷ்ணரின் லட்சியங்களை பின்பற்றி, ஒருங்கிணைந்த மற்றும் வளர்ந்த பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பகவான் கிருஷ்ணரை தர்மம், நீதி மற்றும் மக்கள் நலனின் வடிவமாக வர்ணித்து, நாட்டு மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த புனிதத் திருவிழா ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் நன்மையைக் கொண்டுவரட்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.











