
திருப்பதி: செப். 4-
திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை நிர்வாக அதிகாரி லோகநாதம், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இவர் கலப்பட நெய் விவகாரத்திலும் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான கோயில் வளாகத்திற்குள் இணை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த லோகநாதம், கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே முக்கியப் பங்கு வகித்து
வந்தார். கலப்பட நெய் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சமர்ப்பித்தது. அறிக்கையில், கலப்பட நெய் வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி சில தேவஸ்தான அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவ்வழக்கில் நடவடிக்கை எடுக்கும் வகையில், ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அணில்குமார் சிங்கால் அப்பதவியில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டார். மேலும் சில அதிகாரிகளும் இதில் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர் எனும் தகவல் பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஏழுமலையான கோயில் இணை நிர்வாக அதிகாரியான லோகநாதத்தின் வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்கள், 2 கிலோ தங்க ஆபரணங்கள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. சாதாரண ஊழியராகச் சேர்ந்த லோகநாதத்திற்கு இவ்வளவு சொத்துக்கள் எவ்வாறு வந்தன எனும் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரி லோகநாதத்தை கைது செய்து, நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.












