
உத்தராகண்ட்:செப்டம்பர் 4- இமயமலையின் பனிச்சிகரங்கள் அழகாக தோன்றினாலும், அவை வெப்பமயமாதலால் எப்போது வேண்டுமானாலும் ‘பனி வெடிகுண்டுகள்’ போல் வெடிக்கக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உத்தராகண்டின் அலக்நந்தா மலைச்சரிவுகளில் மட்டும் 219 பனிப்பாறைகள் எந்த நேரத்திலும் உடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம்.
இமயமலை உலகின் சராசரியை விட 2 மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது. இதனால், பனிப்பாறைகள் தங்களின் ஒட்டும் தன்மையை இழந்து, பனிச்சரிவுகளை உருவாக்குகின்றன. இவை உடைந்து விழும்போது தற்காலிக அணைகள் உருவாகி, ‘பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம்’ ஏற்படுகிறது.
இது இயற்கை சீற்றமல்ல, முறையற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சியால் மனிதர் தன்னைத் தானே வைத்துக்கொண்ட சூனியம் என ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
புவனேஷ்வரின் ‘அஷிம் சத்தார் ஆஃப் தி ஸ்கூல் ஆஃப் எர்த், ஓசன் அண்ட் க்ளைமேட் சயின்ஸ்’ மற்றும் பெங்களூரு ‘இந்திய அறிவியல் கழகம்’ (IISc) இணைந்து நடத்திய ஆய்வில், அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய பனிச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டில், 2000-ஆம் ஆண்டை விட 120% அதிகமான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் பேரிடரில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது.
சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகள் ஆபத்தானவை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. இவை குறித்து சிக்கிம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் தாம்பே கூறுகையில், “பனிப்பாறைகள் உருகுவதால் நீரின் அளவு உயர்கிறதா என்பதைக் கண்காணிக்கச் சிறப்பு சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன,” என்றார்.இந்த ஆபத்துகளைத் தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அருணாச்சல பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ மற்றும் வாடியா இமயமலை புவியியல் நிறுவனம் ஆகியவை செயற்கைக்கோள் மூலம் ஏரிகளை கண்காணிக்கின்றன.சர்வதேச கூட்டுறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் சீனா இடையே பனிப்பாறை உருகுதல், வெள்ளம் மற்றும் நில அதிர்வு குறித்த கண்காணிப்புத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவசியம்.













