
புதுடெல்லி: செப்டம்பர் 4-
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, 10ஆம் தேதி அங்கு வலதுசாரி அமைப்பினர் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் ‘சுத்திகரிப்பு’ (புனிதப்படுத்தும்) சடங்குகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில், மாநிலங்களவை தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டாவுக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது: ஹல்த்வானியில் நடந்த நிகழ்வைப் பற்றி நாடாளுமன்றத்தில் நான் கூறியபோது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தீர்கள். ஆனால் சம்பவம் நடந்து 24 நாட்கள் கடந்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) கூட பதிவு செய்யப்படவில்லை. இந்த சுத்திகரிப்பு நடைமுறை நேரடியாக தீண்டாமையுடன் தொடர்புடையது. இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலவருக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும் இதனிடையே, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.













