
திருவனந்தபுரம்: செப்டம்பர் 4-கேரள மாநில உயர்நீதிமன்றம், 18 வயதுக்கு குறைவான சிறுமியுடன் தாம்பத்யம் வைப்பது சட்டப்படி குற்றம் எனத் தீர்ப்பளித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் திருமண வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய உடைகள் வாங்கித் தருவதாகக் கூறி, அந்த சிறுமியை ஒருவர் தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இளைஞருடன் திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரை கைது செய்தனர்.
கேரள உயர்நீதிமன்றத்தில் அந்த இளைஞர் மனுதாக்கல் செய்தார். முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ் நடந்தது குற்றம் இல்லை, எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோபின் செபாஸ்டியன், போக்சோ சட்டத்திற்கே முன்னுரிமை உண்டு என்று தீர்மானித்தார். சிறுமியை திருமணம் செய்து பாலியல் அத்துமீறல் செய்ததால், இளைஞர் குற்றவாளி எனக் கூறப்பட்டது.
அத்துடன், பெற்றோரும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறிய நீதிபதி, சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது எனவும், 18 வயது நிரம்பாதவர்களுடன் தாம்பத்யம் தவறு எனவும் வலியுறுத்தினார்.













