Home செய்திகள் தேசிய செய்திகள் உயர் நீதிமன்ற நீதிபதியை மாற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம்

உயர் நீதிமன்ற நீதிபதியை மாற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: ஆக. 27-
உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பிரகாஷ் சர்மா அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ளார். இந்நிலையில், அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வசதி படைத்த மனுதாரர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கி வருவதாக, தான் ராஜஸ்தான் சென்றபோது சந்தித்த பல நீதிபதிகள் ஆதங்கத்துடன் புகார்களைத் தெரிவித்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொறுப்பு தலைமை நீதிபதியால் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். எனவே, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டுமானால், பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மாவை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும், இதில் தாமதம் செய்வது உயர் நீதிமன்றத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என்றும் நீதிபதி சந்தீப் மேத்தா வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரும் பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா குறித்து பல்வேறு புகார்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி உள்ளனர். குறிப்பாக, வழக்கறிஞர் களாக முறையாகப் பணியாற்றாத 4 பெண் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க அவர் பரிந்துரை அனுப்பியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.