Home மாவட்டங்கள் சென்னை எச்சரிக்கையால் விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

எச்சரிக்கையால் விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

சென்னை, அக். 26-
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவும், 64-வது குருபூஜையும் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதையொட்டி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு, அங்குள்ள ஹெலிபேட் தளத்தில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளும் பசும்பொன்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், உளவுத்துறை மற்றும் போலீசாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பசும்பொன் செல்லும் பயணத்தை முதல்-அமைச்சர் விஜய் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
பசும்பொன்னில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். அங்கு முதல்-அமைச்சர் சென்றால் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். அந்த நேரத்தில் சிறிய அசம்பாவிதம் ஏற்பட்டாலும், எதிர்க்கட்சிகள் அதை பெரிதுபடுத்தி அரசியல் செய்யக்கூடும்.
எனவே, பசும்பொன் பயணத்தைத் தவிர்க்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உளவுத்துறையும் இதே ஆலோசனையை வழங்கியுள்ளது. அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டே, முதல்-அமைச்சர் விஜய் பசும்பொன் பயணத்தைத் தவிர்த்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.