
விசாகப்பட்டினம்: அக். 26-
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘அர்னாப்’ தீவிர புயலாக வலுப்பெற்று, அக்டோபர் 28-ம் தேதி ஆந்திர கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 140 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பாபட்லா முதல் விசாகப்பட்டினம் வரையிலான கடலோரப் பகுதிகள் உயர் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தாலும், ஒடிசாவின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராயகடா, கோராபுட், மல்காங்கிரி, கஜபதி, கஞ்சம் ஆகிய 5 மாவட்டங்களில் அக்டோபர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலையைச் சமாளிக்கும் வகையில் ஒடிசா பேரிடர் விரைவுப் படையின் சுமார் 60 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 17 குழுக்கள் மற்றும் தீயணைப்புச் சேவையின் 225 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 100 புயல் நிவாரண முகாம்களும், 1,000 தற்காலிக
தங்குமிடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடக்கும் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், இரு மாநிலங்களிலும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
புயல் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .
மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் புயல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தமிழ்நாடு ஆந்திரா ஒடிசா மாநில அரசுகளுடன் தொடர் ஆலோசனைகள் உள்ளது. வருமுன் காப்போம் என்ற தாரக மந்திரத்துடன் புயலை சமாளிக்க அரசுகள் தயார் நிலையில் உள்ளன.














