
மும்பை, ஏப்ரல் 18- மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒட்டுமொத்தப் பந்துவீச்சு துறையின் திறமையின்மை குறித்தும், குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறுவது குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே. ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயர், பிரப்சிம்ரன் சிங் ஆகியோராது அதிரடியால் 21 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 41 ரன்களை தாரைவார்த்தார். இம்முறையும் அவர், விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. மும்பை அணிக்கு 5 ஆட்டங்களில் 4-வது தோல்வியாக இது அமைந்தது. போட்டிக்கு பின்னர் மும்பை அணியின் பயிற்சியாளரான மஹேலா ஜெயவர்தனே கூறியதாவது: ஜஸ்பிரீத் பும்ரா சிறப்பாகவே பந்துவீசுகிறார். ஆனால் பவர் பிளே ஓவர்களில் நாங்கள் எதிரணிக்குக் அழுத்தத்தை கொடுக்கத் தவறிவிடுகிறோம். பும்ராவிற்கு எதிராகப் எதிரணியினர் பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை. நாங்கள் சில புதிய முயற்சிகளைச் செய்து பார்த்தோம். பும்ராவும் சில விஷயங்களை முயற்சி செய்து வருகிறார். ஆனால் எதிரணியினர் மிகச் சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார்கள். அவர் விக்கெட் எடுக்காததற்கு இதுதான் காரணம் என்று என்னால் எதையும் விரலை நீட்டி சொல்ல முடியாது. டி20 உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட ஒரு சிறியகாயமே இதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவரது உடல்நிலையை படிப்படியாக மேம்படுத்த விரும்பினோம். கடந்த சில போட்டிகளாக அவரது பந்துவீச்சு வேகம் அதிகரித்துள்ளது. அவர், தற்போது சவுகரியமாக உணர்கிறார். சில நேரங்களில் சிறிய அளவில் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது.





















