
புதுடெல்லி: ஆக. 10-
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 (எப்சிஆர்ஏ) வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் எந்த மாநிலத்தில் என்னென்ன தொண்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதை தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) உறுதிமொழி பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
வெளிநாட்டு நன்கொடைகளை ஒருபோதும் மதமாற்றத்துக்கு பயன்படுத்தக் கூடாது. என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளிநாட்டு நன்கொடைகளால் உருவாக்கப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகமே கையாளும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் 22,498 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 15,212 என்ஜிஓக்களின் பதிவு காலாவதியாகி உள்ளது. சுமார் 14,449 என்ஜிஓக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எப்சிஆர்ஏ மசோதாவின் மூலம் உரிம பதிவு ரத்து செய்யப்பட்ட என்ஜிஓக்களின் சொத்துகளை அரசு நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதே காரணத்தை சுட்டிக் காட்டி பல்வேறு கிறிஸ்தவ, முஸ்லிம் மதம் சார்ந்த என்ஜிஓக்களும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.













