
புதுடெல்லி: மே 2 –
ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 81 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவு மற்றும் தேநீர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று ரூ.993 வரை உயர்த்தியுள்ளது.
இதனால், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 990.50 அதிரிகரித்து ரூ.3,237-க்கு விற்பனையாகும். தலைநகர் டெல்லியில் ரூ.2,078.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர், இனி ரூ.3,071.50-க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் ரூ.2,031-ல் இருந்து ரூ.3,024 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்து வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 3-வது முறை. மார்ச் மாதத்தில் ரூ.144, ஏப்ரல் 1-ல் ரூ.200 என உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சுமையை மக்கள் மீது சுமத்தும் வகையில் உணவுப் பண்டங்கள், தேநீர் விலை மற்றும் உணவுப் பொருள் டெலிவரி கட்டணத்தை ஓட்டல்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பொருளாதாரப் பேராசிரியர் விகாஸ் பிரகாஷ் சிங் கூறும்போது, “ஈரான் போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை மேலும் உயர்ந்து, பில்கள் அதிர்ச்சி தரக்கூடும். சிறிய சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலை, ஏழை எளிய மக்களை கவலையடையச் செய்துள்ளது” என்றார். வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை: வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ள போதிலும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்படவில்லை. இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரம், சர்வதேச விமான எரிபொருள்விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமான பயணத்துக்கான கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், சுமார் 4 ஆண்டுகளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இருப்பதால், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மற்றும் டீசலுக்கு ரூ.100 நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சந்தைஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


















