Home செய்திகள் தேசிய செய்திகள் கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சி திடீர் ரத்து – கொந்தளித்த இளைஞர்கள்

கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சி திடீர் ரத்து – கொந்தளித்த இளைஞர்கள்

கொல்கத்தா: ஆக. 19-
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற இருந்த கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அரங்க உரிமையாளர்களுக்கு பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ள கரப்பான் பூச்சி கட்சி, மாநில அரசிடம் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சியினர் நீட் குளறுபடிகளை கண்டித்து மிக பெரிய போராட்டம் நடத்தினர். இதற்கு நாடு முழுக்க மிக பெரிய ஆதரவு கிடைத்தது. இதனால் வேறு வழியின்றி மத்திய கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கரப்பான் பூச்சி இயக்கத்திற்குக் கிடைத்த மிக பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளை கரப்பான் பூச்சி கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்திலும் கரப்பான் பூச்சி கட்சி நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது. வடக்கு கொல்கத்தாவில் உள்ள பாரத் சபா ஹாலில் கர்பான் பூச்சி கட்சி சார்பில் மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்தோஷ் ரங்கா பங்கேற்று, பொதுமக்களுடன் கலந்துரையாட இருந்தார். இருப்பினும், அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பாஜக தலைவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததை தொடர்ந்து ஹால் உரிமையாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அஷ்தோஷ் ரங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். மாற்று இடம் தேடியபோது மேலும் 6 அரங்கங்களின் உரிமையாளர்களும் நிகழ்ச்சிக்கு இடம் வழங்க மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க பாஜக அரசிடம் இருந்து கடும் அழுத்தம் வந்ததாலேயே அவர்கள் மறுத்ததாகவும் அஷ்தோஷ் ரங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க பாஜக அரசுக்கு கரப்பான் பூச்சி கட்சியின் மீது அச்சம் இருப்பதாக கூறியுள்ள அஸ்தோஷ், இதன் காரணமாகவே பாஜக இப்படி அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார். மேலும், இந்த அழுத்தத்தை கண்டு எல்லாம் கரப்பான் பூச்சி கட்சி பயப்படாது என்றும் விரைவில் இதைவிட மிக பெரிய நிகழ்ச்சியை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்.