
ராய்ப்பூர், ஜூன் 25- சத்தீஸ்கர் மாநிலம் பலுடாபஜார் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக அரங்கேறி வந்த மர்ம மரணங்களின் பின்னணியில் இருந்த ஒரு ‘சைக்கோ’ கொலைகாரனை போலீஸார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கரின் கார்வே கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சகாய் ஜெய்ஸ்வால் (46). இவர் தனது கடையில் எலித் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறி எலி மருந்தை வாங்கியுள்ளார். முதலில் இந்த விஷத்தை நாய்க்கு வைத்து சோதித்துப் பார்த்துள்ளார். நாய் இறந்ததைத் தொடர்ந்து தனது எதிரிகளைத் தீர்த்துக் கட்ட இந்த எலி மருந்தையே பயன்படுத்த முடிவு செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஜூன் 6-ம் தேதி கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் காவல் துறையில் புகார் செய்தனர். தோண்டி எடுக்கப்பட்ட 7 சடலங்கள்: வழக்கின் தீவிரத்தை உணர்ந்த போலீஸார், ராய்ப்பூர் மருத்துவ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட 7 பேரின் சடலங்களை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.புத்ராம் ஜெய்ஸ்வாலின் உடல் ஏற்கெனவே எரிக்கப்பட்டு விட்டதால், மற்ற உடல்களின் டிஎன்ஏ மற்றும் உடல் உள்ளுறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாரின் விசாரணையில் மாட்டிய ராம் சகாய், தனது கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.தன்னிடம் இலவசமாக மது கேட்டு மிரட்டியது, தேர்தல் முன்விரோதம், பொது இடத்தில் அவமானப் படுத்தியது, நிலத் தகராறு, செய்வினை செய்ததாக எழுந்த சந்தேகம் என மிகவும் அற்பமான காரணங்களுக்காக இந்த 8 கொலைகளையும் செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். குறிப்பாக, மகேத்ரு ராம் என்பவரிடம் வாங்கிய ரூ.50,000 கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதற்காகவே அவருக்கும் மதுவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி, கார்த்திக் என்பவருக்கும் ராம் சகாய் விஷம் கலந்த மதுவைக் கொடுத்துள்ளார். ஆனால், உடல்நிலை மோசமடைந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் அவர் உயிர் பிழைத்தார்.


















