Home செய்திகள் உலக செய்திகள் சவுதி ராணுவ வாகனங்கள் மீது ஏமனில் தாக்குதல்

சவுதி ராணுவ வாகனங்கள் மீது ஏமனில் தாக்குதல்

சனா: செப்.9
சவுதி அரேபியா-ஏமன் எல்லையிலுள்ள அல்-வடியா முகாமில், சவுதி ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது ஏமனின் ஹவுதி படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பாய்ச்சியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ உபகரணங்கள் ஏற்றிய வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் நீண்ட காலமாக தொடரும் நிலையில், இது பிராந்திய போராக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஆதரவுடன் உள்ள அமைப்புகள் தாக்குதல் நடத்துவதால் நிலைமை மேலும் மோசமாகிறது.
ஏமனில் உள்ள ஹவுதி படைகள், சவுதி வாகனங்கள் மீது நடத்திய இந்த தாக்குதலை வெற்றிகரமாக முடித்ததாகவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது. அல்-வடியா முகாமில் சவுதி படையினர் மற்றும் ராணுவ முகாம்களை கண்காணித்ததும், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததும் கண்டறிந்ததாக ஏமன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் வீடியோவில், ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்து தாக்கிய காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த தாக்குதலின் போது ஏற்பட்ட வெடிப்புகள் மற்றும் புகை மண்டலம் வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்களும் ஹவுதி படையினரின் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்காகியதாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். தெற்கு மாகாணத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி, பணிகள் நிறுத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
சவுதி அரேபியா, இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் இறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.