
புதுடெல்லி: செப். 9-
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநாடு வரும் 12 மற்றும் 13-ந்தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, 11-ந்தேதி அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
ரஷிய அரசின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை உறுதிசெய்தார். இரு தலைவர்களும் முதலில் பிரிக்ஸ் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆலோசித்து, பின்னர் இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனக் கூறினார்.
மோடி-புதின் சந்திப்பில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷியாவிடம் இருந்து எஸ்.யு.-57 ரக போர் விமானங்களை இந்தியா வாங்குவது தொடர்பாகவும் பேசப்படலாம் என பெஸ்கோவ் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.













