
புதுடெல்லி, செப். 9- மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் தொடர்ந்த வழக்கு ஆகியவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே. பரமேஷ்வர் வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் மேகமலை தொடர்பான வழக்கை செப்டம்பர் 22-க்கு தள்ளிவைத்தனர். அப்போது, கே. பரமேஷ்வர் தரப்பு வழக்கறிஞர், மேகமலை வழக்கை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், நீதிபதிகள் அடுத்த வாரம் பல வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதால் மேகமலை வழக்கை 22-ஆம் தேதியே விசாரணைக்கு எடுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்ட வேண்டும். ஏனெனில் ஆக்ரமிப்புக்கான மிக முக்கிய காரணமானவர்களே அந்தத் தோட்ட உரிமையாளர்கள் தான் எனவும், வன நிலங்களை ஆக்ரமித்துள்ள யாராக இருந்தாலும் அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு உள்படவற்றை துண்டிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.














