
புதுடெல்லி, அக். 11- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) ஒரே பிரச்சினை மற்றும் கோரிக்கை. ஆனால், சிஜேபியுடன் இணைந்து போராடாமல் ராகுல் காந்தி விலகியிருப்பது ஏன்? என்பது குறித்த முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நேற்று முதல் டெல்லியில் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த அமைப்பினர் கட்டுப்பாட்டை மீறினாலோ அல்லது வன்முறை வெடித்தாலோ நிலைமை மோசமடைந்துவிடும் என்று டெல்லி காவல் துறை அஞ்சுகிறது. இதையொட்டி டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அந்த அளவுக்கு தீவிரமான போராட்டமாகக் கருதப்படும் நிலையில் இதில் பங்கேற்காமல் காங்கிரஸ் கட்சி விலகி இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் நேற்று பங்கேற்ற மாணவர் கூட்டம் காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் வேறு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
டெல்லி அரசியலில் பேசப்படுவதன்படி, ‘ஞானேஷ் குமாருக்கு எதிரானப் போராட்ட முகமாக தன்னைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என ராகுல் காந்தி எண்ணுகிறார். மத்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் மூலம் கிடைக்கும் கவனத்தை ராகுல் காந்தியைத் தவிர வேறு எவருக்கும் கிடைக்க அக்கட்சி விரும்பவில்லை. மேலும், சிஜேபியினருக்கு அடிமட்ட அளவிலான ஆதரவோ அல்லது அரசியல் வரலாறோ இல்லை. அவர்கள் தேர்தல் அரசியலிலும் ஈடுபடவில்லை.
இதனால், அவர்கள் காங்கிரஸை விடப் போராட்டத்தில் சற்று அதிக சுதந்திரம் எடுத்து செயல்படுகிறார்கள்.
இதன் காரணமாக, போராட்டங்களின்போது ஏற்படும் எந்தவொரு இடையூறுக்கும் தாங்கள் பழிவாங்கப்படவோ அல்லது குற்றம் சாட்டப்படவோ காங்கிரஸ் விரும்பவில்லை’ என்பது தகவலாக உள்ளது.














