
புதுடெல்லி: மே 13-
நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் நிறுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வருவதால், பலரும் குழப்பத்தில் உள்ளனர். அதிலும் “7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் மானியம் நிறுத்தப்படும்” என்ற குறுந்தகவல் பலரது செல்பேசிகளுக்கு வரத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டருக்கான மானிய திட்டத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறது. ஆரம்பத்தில் சிலிண்டர் வாங்கும் போதே குறைந்த விலையில் வழங்கப்பட்ட மானியம், பின்னர் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையாக மாற்றப்பட்டது அதன்படி, வாடிக்கையாளர்கள் முழு தொகையை கொடுத்து சிலிண்டர் வாங்கி, அதன் மானியத் தொகையை வங்கி கணக்கில் பெற்றுவந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த மானியத் தொகை படிப்படியாக குறைக்கப்பட்டது. மோடி அரசு ஒரு கட்டத்தில் 300 ரூபாயாக இருந்த மானியம் தற்போது மிகவும் குறைந்த அளவாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கிடையில், மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு வருமான அடிப்படையிலான கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த குடும்பத்திற்கு எல்பிஜி மானியம் வழங்கப்படாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதியாகும். எண்ணெய் நிறுவனங்கள் தற்போது இதை மேலும் தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதற்காக வாடிக்கையாளர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள் ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்தை தாண்டும் குடும்பங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.


















