
சென்னை: மே 13-
சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் மரபு மீறப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இதற்கு சபாநாயகர் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் மரபுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இன்றைய தினம் அந்த மரபுகளை கடைபிடிக்கவில்லை. முதலமைச்சர் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். அதை வழிமொழிகிறேன் என்பதுதான் மரபு” என்று அவர் பேசி கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், “இதற்கு முன்பு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் உறுப்பினர்கள் கருத்து சொல்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று விளக்கமளித்தார். மீண்டும் தொடர்ந்த எடப்பாடி, கருத்து வேறுபாடுகள் எல்லா கட்சியிலும் இயல்பு. அதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது எப்படி நியாயமாக இருக்கும்.
குதிரை பேரம் நடந்துள்ளதாக வந்துள்ள புகார் கவலையளிக்கிறது. அதிமுகவில் வெற்றி பெற்றுள் 47 எம்எல்ஏக்களும் மக்கள் எங்கள் கட்சி, சின்னத்தை நம்பி வாக்களித்துள்ளனர். 64 சதவீதம் வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்” என்று பேசினார்.



















