Home செய்திகள் தேசிய செய்திகள் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – போலீஸ்காரர் உள்ளிட்ட 6 பேர்...

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து – போலீஸ்காரர் உள்ளிட்ட 6 பேர் பலி

திருப்பூர்: மே 13-
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கோர சாலை விபத்தில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்த போது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் காவலர், லாரி ஓட்டுநர், காரில் பயணம் செய்த 4 பேர் என 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உத்தாண்ட குமாரவலசு பிரிவு அருகே வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி திருச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனைச் சாவடி அருகே இருந்த சாலை தடுப்பு மீது சவுக்கு கட்டை ஏற்றி வந்த லாரி மோதி உள்ளது இதை அடுத்து லாரியை தூரம் தள்ளி நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் மற்றும் அங்கு பணியில் இருந்த ரவிக்குமார் என்ற காவலர் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே திசையில் அதி வேகத்தில் வந்த மகேந்திரா சைலோ வகை கார் ஒன்று லாரி ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த காவலர் ரவிக்குமார் மீது மோதி விட்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் கார் உருக்குலைந்து காரில் வந்த பெண் ஒருவர் உட்பட 4 பேர் சாலையில் நின்று கொண்டிருந்த காவலர் மற்றும் லாரி ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர்.
இதனால் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் காங்கேயம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புட் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இறந்த 6 பேரின் சடலங்களை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.