
டெஹ்ரான், ஜூலை 20- அமெரிக்கா விதித்த தடைகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஒரு மாத காலத்தில்,
ஈரான் தன் நட்பு நாடான சீனாவுக்கு, 7 கோடி பேரல் கச்சா எண்ணெயை ரகசியமாக ஏற்றுமதி செய்து, 50,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா பல ஆண்டுகளாக பொருளாதார தடைகளை விதித்திருந்தது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில், அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் முதல் தற்போது வரை சில கட்டுப்பாடுகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 20 ஈரான் எண்ணெய் கப்பல்கள், மலேஷியாவின் கிழக்கு கடற்பகுதிக்கு சென்றதாக, அமெரிக்காவின், ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு கடலிலேயே ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு கச்சா எண்ணெய் மாற்றப்பட்டு, சீனாவில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சந்தை ஆய்வாளர்கள் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இந்த ஒரு மாதத்தில், 7 கோடி பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவலை அமெரிக்கா, ஈரான் அல்லது சீனா உறுதிப்படுத்தவில்லை.














