Home செய்திகள் உலக செய்திகள் சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே மாணவர்கள் வெளிநடப்பு

சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு? பேச்சை தொடங்கிய உடனே மாணவர்கள் வெளிநடப்பு

வாஷிங்டன், ஜூன் 15- உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியரான சுந்தர் பிச்சை. இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார், குறிப்பாக கல்லூரி நிகழ்ச்சி என்றால் மாணவர்கள் அனைவரும் இவரது பேச்சை கேட்க ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறான ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற மேடை ஏறினார். அப்போதே லேசாக சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தனது பேச்சைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அங்கிருந்த சுமார் 200 மாணவர்கள் தங்களின் பட்டமளிப்பு உடைகளுடன் எழுந்து, அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் ‘புராஜெக்ட் நிம்பஸ்’ (Project Nimbus) என்ற $1.2 பில்லியன் மதிப்புள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஒப்பந்தத்தை வைத்துள்ளன. காசா பகுதியில் நடந்து வரும் போரில், இந்த தொழில்நுட்பங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடும் என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போரின் மூலம் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் தங்களது குரலை உயர்த்தவே மாணவர்கள் இந்த வெளிநடப்பைச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் அரங்கிலிருந்து வெளியேறும்போது “Free Palestine” என முழக்கமிட்டுள்ளனர். சுந்தர் பிச்சை இந்த எதிர்ப்பைப் பற்றி தனது உரையில் நேரடியாக எதுவும் பேசவில்லை. பொதுவாக தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் தங்களது உரைகளில் செயற்கை நுண்ணறிவு பற்றிப் பேசுவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் AI என்ற வார்த்தையையே தனது பேச்சில் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, நம்பிக்கையைத் தேர்ந்தெடுங்கள் (Choose Optimism) என்ற தலைப்பில் பேசிய சுந்தர் பிச்சை, ஒவ்வொரு தலைமுறையும் தங்களுக்குரிய சவால்களையும் கடினமான காலங்களையும் சந்தித்துதான் வந்துள்ளது. நாம் எந்த மாதிரியான உலகிற்குள் நுழைகிறோம் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது, ஆனால் நம் சூழ்நிலைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த போது தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.