
ஜெனிவா: ஜூன் 15-
உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் அதிரடி திருப்பமாக, ஒட்டுமொத்த உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா – ஈரான் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘அமைதி ஒப்பந்தம்’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! வரும் ஜூன் மாதம் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வ
கையெழுத்தாக உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ‘ஹோமுஸ்’ கடல் வழித்தடத்தில் இனி எந்தவித வரியும் (சுங்கக் கட்டணம்) இல்லாமல் கப்பல்கள் தாராளமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், இரண்டு தரப்புக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதை பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதல் நபராக அறிவித்தார்.
தீவிர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. இரண்டு தரப்பும் உடனடியாக ராணுவ ரீதியான நடவடிக்கையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன. வரும் 19-ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை மேற்கொள்ள கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் உறுதுணையாக இருந்ததாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை உறுதி செய்தார். “ஈரான் இஸ்லாமிய குடியரசு நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் பாராட்டுகள். உலக நாடுகளின் கப்பல்கள் அதன் என்ஜினை ஸ்டார்ட் செய்யலாம். ஹார்முஸ் ஜலசந்தியை கட்டணமின்றி கடக்கலாம். அதே நேரத்தில் அமெரிக்க கடற்படை முற்றுகை திரும்பப் பெறப்படுகிறது” என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு முரணாக ஈரான் செயல்பட்டாலோ அல்லது அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஈரான் இறுதி செய்ய தவறினாலோ அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்கும் என எச்சரித்திருந்தார்.
அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாவலராக செயல்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எந்தவித கட்டணமும் ஈரான் வசூலிக்க கூடாது என்பதை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வரும் 19-ம் தேதி ஜெனிவாவில் கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தத்தில் ட்ரம்ப் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரான் சொல்வது என்ன?
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானதை ஈரானும் உறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டின் கடற்பகுதி அமெரிக்க ராணுவ முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தின் அனைத்து பகுதிகளிலும் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
14 முக்கிய அம்சங்களை முன்வைத்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் முடக்கப்பட்ட ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளதாக தகவல்.
அதேபோல ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் வெள்ளிக்கிழமை முதல் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்றும், ஈரான் கடற்பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் 30 நாட்களுக்குள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





















