Home செய்திகள் உலக செய்திகள் சூரியப் புயல்: காந்தப்புலம் பாதிக்க வாய்ப்பு

சூரியப் புயல்: காந்தப்புலம் பாதிக்க வாய்ப்பு

வாஷிங்டன், அக். 11-
சூரியனில் ஏற்பட்டுள்ள இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புகளால் பூமியின் காந்தப்புலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் சில பகுதிகளில் துருவ ஒளி (Aurora) தென்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனில் இருந்து வெளியேறிய மின்னூட்டம் கொண்ட துகள்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அக்டோபர் 11-ம் தேதி சூரியப் புயலின் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான NOAA, மிதமான அளவிலான G2 புவிகாந்தப் புயலுக்கான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதனால் சில செயற்கைக்கோள்கள், வானொலி தகவல் தொடர்புகள் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சூரியனில் ஏற்படும் தீவிர செயல்பாடுகளால் ஆற்றலும் பொருட்களும் விண்வெளிக்குள் வெளியேற்றப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ‘கொரோனல் மாஸ் எஜெக்ஷன்’ (CME) எனப்படும் நிகழ்வாகும். சூரியனில் இருந்து வெளியேறும் மின்சுமை கொண்ட துகள்கள் மற்றும் காந்தப் பொருட்கள் பூமியை வந்தடையும்போது, காந்தப்புலத்தில் இடையூறு ஏற்பட்டு புவிகாந்தப் புயல் உருவாகலாம். NOAA, இத்தகைய புயல்களை G1 முதல் G5 வரை வகைப்படுத்துகிறது. G1 குறைந்த பாதிப்பையும், G5 மிகத் தீவிரமான பாதிப்பையும் குறிக்கிறது. NOAA-வின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சூரியனில் இருந்து வெளியேறிய இரண்டு வெடிப்புகளின் தாக்கம் பூமியை அடையும்போது G2 அளவிலான புவிகாந்தப் புயல் ஏற்படலாம். இரண்டாவது வெடிப்பில் வெளியேறிய பொருட்கள் வேகமாகப் பயணிப்பதால், அவை முதலாவது வெடிப்பில் வெளியேறிய பொருட்களுடன் ஒன்றிணையக்கூடும்.